சாணம்! .....இது சரியல்ல!...
நண்பர்களே!
கால்நடைகளின் சாணம் மண்ணிற்குச் சிறந்த எரு எண்பது அனைவரும் அறிந்ததே!
அதனால்தான் ஆடு, மாடு, கோழி, எருமை, பன்றி, கழுதை என எந்த ஒன்றின் சாணக் கழிவுகளையும் மண்ணில் எருவாக இட்டு இயற்கை முறையில் நல்ல விளைச்சலைப் பெற முடிகிறது.
அதனால்தான் விவசாயிகளில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு வகையில் கால்நடைகளைச் சார்ந்தே இருக்கின்றனர்.
ஆனால் பசுமைப் புரட்சியும் இயந்திரப் பயன்பாடும் நடைமுறைக்கு வந்த பின்னால் கால்நடைகளுக்கு வேலை இல்லாமல், அவற்றிடம் வேலை வாங்க ஆட்கள் இல்லாமல் கால்நடைகளே இல்லாமல் விவசாயம் செய்பவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை என்று ஆகி விட்டது!
அதன் பயனாக வேதிப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததும் மண் வளம் இழந்து களர்த் தன்மை அடைந்து வருவதும் மீண்டும் பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பவேண்டும் என்ற உணர்வு வளர்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே!...
அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் இயற்கை வேளாண்மை , அதன்மூலம் இயற்கையாக விளைந்த நஞ்சில்லா உணவு வகைகள் என்ற உணர்வு வேகமாக அதிகரித்து வருகிறது!
ஆனால் இயற்கை வேளாண்மை என்பது தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கும் பொருட்களை நம்பிச் செய்யப்படுவது அல்ல!
மண்ணை வளப்படுத்த இயற்கையான முறைகள் என்னென்ன உண்டோ அத்தனையையும் முயற்சிக்க வேண்டும்.
முக்கியமாகக் கால்நடைகளின் சாணம் மற்றும் மூத்திரக் கழிவுகளை முழு அளவில் பயன்படுத்த வேண்டும்.
தற்காலங்களில் சாணக் கழிவுகளை வீணடிக்கும் போக்கு அதிகமாக உள்ளது!
முன்னர் நாங்கள் இளவயதாக இருந்த காலங்களில் கிலோமீட்டர் கணக்கில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நடந்தே செல்வோம்.
அப்போதெல்லாம் வழியில் சாணம் கிடந்தால் அதை விட மாட்டோம். அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு வந்து சொந்த நிலத்தில் இடுவோம்.
கைகளுக்கு அடங்காத அளவு நிறைய இருந்தால் அங்கே இருக்கும் எருக்கு, ஆவாரை போன்ற செடிகளின் கிளைகளை ஒடித்துப் பரப்பி அதன்மேல் சாணத்தை நிறைய வைத்து ஏந்திச் சென்ற அனுபவம் எல்லாம் உண்டு!...
ஆனால் தற்காலத்தில் அப்படி நடந்து செல்வாரும் இல்லை! வழியில் சாணம் கிடந்தாலும் அதைச் சீந்துவாரும் இல்லை!....
அந்தக் காலத்தில் தோட்டங்களில் ஆட்டுக் கிடை, மாட்டுக்கிடை என்று சாகுபடி நிலத்திலேயே பட்டிபோட்டு ஆடு மாடுகளைக் கட்டுவார்கள்.
அதன்காரணமாக கால்நடைகளின் சாணக் கழிவுகளும் மூத்திரக் கழிவுகளும் உடனுக்கு உடன் மண்ணில் கலக்கப்பட்டது.
ஆதாவது பாட்டிக்குப் பக்கத்திலேயே ஒரு கலப்பை கிடக்கும். காலை எழுந்தவுடன் ஆடு மாடுகளை இடம் மாற்றி வேறிடத்தில் கட்டிவிட்டு அல்லது வேலைகளுக்கும் மெய்ச்சலுக்கும் அனுப்பிவிட்டு உடனே அந்தக் கலப்பையைப் பயன்படுத்தி உழுது விடுவார்கள்....
அதன்மூலம் அந்த சாணக் கழிவுகள் கொஞ்சமும் சேதப்படாமல் மண்ணில் சேருவதோடு. எண்ணற்ற நுண்ணுயிரிகள் நிலத்தில் பெருகி வளப்படுத்தத் துணை செய்கிறது.
ஆனால் தற்காலத்தில் வேதி உரங்களைப் பயன்படுத்துவதுபோலவே கால்நடைக் கழிவுகளையும் உடனே மண்ணில் சேர்க்கும் வழக்கத்துக்குப் பதிலாக ஆங்காங்கே குவித்து வைத்து ஆறுமாதம் ஒரு வருடத்துக்குப் பின்னால் வண்டி வாகனங்களைப் பயன்படுத்தி ஒரேயடியாக அள்ளிச் சென்று நிலத்தில் இடுகிறார்கள்.
அந்த இடைக்காலத்தில் நீண்ட காலம் குவியலாகக் கிடக்கும்போது அதன் சாரம் இழந்து பகுதிச் சத்துக்களை இழந்து சக்கையாகி விடுகிறது!
அதன்பின்பு நிலத்தில் இட்டு உழவு செய்து தாமதிக்கும் அளவு மேலும் சாரம் இழக்கிறது!
அதனால் மண்ணுக்குக் கிடைக்கவேண்டிய பயனுள்ள சத்துக்கள் வீணடிக்கப்படுகிறது.
நிலத்தில் கோடிக்கணக்கான பயனுள்ள நுண்ணுயிர்களுக்கும் மண்புழுக்களுக்கும் உணவாகி அவற்றின்மூலம் மண் வளப்படுவதற்குப் பதிலாக நுண்ணுயிர்களற்ற கட்டாந்தரையாக நீண்டகாலம் வைக்கப்படுகிறது!
அதனால் இயற்கை வேளாண்மையில் ஆர்வம் காட்டும் ஒவ்வொருவரும் அறியவேண்டிய முக்கியமான விஷயம் கால்நடைக் கழிவுகளைத் தாமதம் இன்றி விவசாய நிலத்தில் கலந்துவிடவேண்டும்.
அப்படிச் செய்யாமல் விட்டால் சாண எருவே வீணாகிறது என்பதற்குப் பதிலாக. அப்படிச் செய்தால் பயன் இரட்டிப்பு ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!....
சாணக் கழிவுகள் குவியலாகக் கொட்டிக்கிடந்தது வீணாக்கவேண்டிய பொருள் அல்ல!
மண்ணைப் பொன்னாக்கும் மாமருந்து என்பதை உணர்ந்து அதை உரிய முறையில் கையாள வேண்டும்......
நன்றி: http://www.drumsoftruth.com/2013/09/60.html